பாடசாலைக்கு வருகின்ற மாணவர்கள் அனைவரும் ஒரே மாதிரியானவர்கள் அல்ல. அவர்கள் வெவ்வேறுபட்ட சமூகங்களிலிருந்தும் பல்வேறு குடும்பப் பின்னணிகளிலிருந்தும் பாடசாலைக்கு வருகின்றனர். அவர்களது பழக்கவழக்கங்கள், செயற்பாடுகள் என்பன தனித்துவமானவையாகக் காணப்படுகின்றன.
பாடசாலைக்கு வருகைதருகின்ற மாணவர்கள் யாவருமே கல்வியைப் பெறும் உரிமையுடையவர்கள். மாணவர்களிடத்தில் காணப்படுகின்ற உடல், உள, மனவெழுச்சிக் குறைபாடுகளோ அல்லது வசதியீனங்களோ அவர்களை கல்வியைப் பெறுவதிலிருந்து தடுத்துவிட முடியாது. அதற்கு நாம் இடமளிக்கவும் கூடாது. வகுப்பறையிலுள்ள மாணவர்களில் அனேகர் ஏதோ ஒரு வகையில் குறைபாடுடையவர்களாகக் காணப்படுவது வழமையானதொன்றாகும். எனினும் அவ்வாறான மாணவர்களுக்கும் கல்வியைப் பெற்றுக்கொடுக்க வேண்டியது கல்வித் துறையில் உள்ள ஆசிரியர்கள், அதிபர்கள் மற்றும் ஏனைய கல்வி அதிகாரிகள் போன்றோரது மறுக்கமுடியாத கடமையாகும்.
பொதுவாக பின்வரும் பிரச்சினைகளையுடைய மாணவர்கள் வகுப்பறைகளில் காணப்படுகின்றனர்.
புலன்கள் ரீதியான குறைபாடுகள்
ஏனைய உடலியற் குறைபாடுகள்
உளவியற் குறைபாடுகள்
பிறழ்வான நடத்தை
மெல்லக் கற்றல் நிலை
மீத்திறன் தன்மை
எழுதுவதில் சிரமம்
வாசிப்பதில் சிரமம்
கிரகித்தலில் சிரமம்
மொழி பேச்சுக் குறைபாடு
மேற்குறிப்பிட்ட பிரச்சினைகளைக் கொண்ட மாணவர்களை கற்றலில் இடர்படுகின்ற மாணவர்கள் என நாம் அடையாளப்படுத்த முடியும். இங்கு கற்றலில் இடர்படுவோர் எனில் “ஒரு தமக்கு ஏற்பட்டிருக்கும் பாதிப்பினால் ஏனைய சாதாரண மாணவர்களைப் போல் கற்றலில் ஈடுபட சிரமப்படுவோர்” என்பதாகும். இவ்வாறு கற்றலில் இடர்படுகின்ற மாணவர்களையும் அறிவு, மனப்பாங்கு, திறன் என்பவற்றில் தேர்ச்சியடையச் செய்வது ஆசிரியரின் கடமையாகும்.
ஒரு ஆசிரியர் பல்வேறுபட்ட வகிபாகங்களைக் கொண்டிருக்கின்றார். அவையாவன,
வழிகாட்டுபவர்
ஆய்வாளர்
ஆலோசனை வழங்குபவர்
ஊக்குவிப்பாளர்
மதிப்பிடுபவர்
பிரச்சினைகளைத் தீர்ப்பவர்
இனங்காண்பவர்
முகாமையாளர்
தலைமைத்துவம் வழங்குபவர்
கற்றலுக்கு உதவுபவர் என்பனவாகும்.
கற்றலில் இடர்படுகின்ற விசேட தேவைகள் சார் கல்வி தேவைப்படுகின்ற மாணவர்களுக்கு க்றபிக்கின்ற ஒரு ஆசிரியர் மேலே குறிப்பிடப்பட்ட வகிபாகங்களுக்கூடாகவே அவ் மாணவர்களுக்கு கல்வியை வழங்க முடியும்.
ஒரு ஆசிரியர் கற்றலில் இடர்படுகின்ற மாணவர்களுக்கு கற்றல் வசதிகளை ஏற்படுத்துவதற்கு பின்வரும் படிமுறைக;டாக பயனிக்க வேண்டும். மாணவர்களை அவதானித்தல்
கற்றலில் இடர்படுகின்ற மாணவரை இனங்காணல்
மாணவர் கற்றலில் இடர்படுவதற்கான காரணத்தை அறிதல்
மாணவருக்கும் மாணவரின் பெற்றோருக்கும் பொருத்தமான ஆலோசனைகளை வழங்குதல்
மாணவர் சிரமமின்றி கற்பதற்குரிய வசதிகளை ஏற்படுத்துதல்
குறித்த மாணவரை தொடர்ச்சியாக அவதானித்து அவ்வப்போது மாணவருக்குத் தேவையான ஆலோசனைகளையும் மேலதிக உதவிகளையும் வழங்குதல்
சாதாரண வகுப்பறையில் காணப்படுகின்ற சாதாரணமான மாணவர்கள் மத்தியிலேயே கற்றலில் இடர்பாடுள்ள மாணவர்களும் காணப்படுவர். ஒரு ஆசிரியர் முதலில் மாணவர்களை அவதானிப்பதன் மூலம் இவ்வாறானவர்களை இணங்கண்டாலேயே மேற்கொண்டு அவர்களது கற்றல் செயற்பாடுகiளுக்கு உதவி செய்ய முடியும். விசேட தேவைகள் சார் கல்வி அறிவுள்ள ஒரு ஆசிரியரால் மாத்திரமே மாணவர்களின் துலங்கல், அவர்களது ஏனைய செயற்பாடுகள் என்பவற்றைக் கொண்டு கற்றலில் இடர்பாடுள்ள மாணவர்களை இனங்காண முடியும். ஏனைய விசேட தேவைகள் சார் கல்வி தொடர்பாக அறிந்திராத ஆசிரியர்களால் கற்றலில் இடர்படுகின்ற மாணவர்களை இனங்காண்பது கடினமான விடயம். இவ் விசேட தேவை சார் கல்வியறிவற்ற சில ஆசிரியர்கள் கற்றலில் இடர்படுகின்ற மாணவர்களை அடையாளம் காணத்தவறி அம் மாணவர்களுக்கு பாரிய துரோகம் இளைப்பது மட்டுமன்றி சாதாரண மாணவர்களையும் விசேட தேவையுடைய மாணவர்களாக தவறாக இனங்காண்பதையும் அறிய முடிகிறது.
உதாரணம் : முன்னைய நாட்களில் அன்னப்பிளவுள்ள பிள்ளைகளும் விசேட தேவையுடைய பிள்ளைகள் என தவறாகக் கணிக்கப்பட்டனர்.மேலும் இவ்வாறு இனங்காணப்பட்ட மாணவர்கள் கற்றலில் இடர்படுவதற்கான பிரதான காரணம் உடல் ரீதியான குறைபாடா? அல்லது உளரீதியான பிரச்சினையா? அல்லது மனவெழுச்சி ரீதியான கோளாறா? ஒரு ஆசிரியர் பிரித்தறிவதும் அவசியமாகும். இச் செயற்பாடும் விசேட தேவைகள் சார் கல்வி அறிவுள்ள ஆசிரியராலேயே முடியும்.
உதாரணமாக, ஒரு மாணவனை ஆசிரயர் அழைக்கும் போது அம் மாணவன் எதுவித துலங்கலுமின்றி இருப்பானாகில் அம் மாணவனுக்கு காது கேட்காமை (உடற்குறைபாடு) என்ற பிரச்சினை உள்ளது என்பதை ஆசிரியர் புரிந்துகொள்ளக் கூடியவராக இருக்க வேண்டும். ஒரு மாணவன் எந்த நேரமும் எதையோ ஒன்றைப் பற்றி ஆழ்ந்த சிந்தனையில் இருப்பதை பார்க்கும் ஆசிரியர் ஒருவருக்கு அம் மாணவன் உளரீதியாக பாதிக்கப்பட்டவன் என்பது புலப்பட வேண்டும். ஒரு மாணவன் ஆசிரயர் ஏதேனும் கற்றலுடன் தொடர்பான வேலைகளைக் கொடுத்தால் அதை செய்து முடிக்கும் வரையில் பதற்றமாகவே காணப்படுவானாயின் அவனுக்கு மனவெழுச்சிரீதியான பிரச்சினை உண்டு
என்பதை ஆசிரியர் புரிந்துகொள்வது அவசியமாகும். இவ் உதாரணங்களில் கூறப்பட்ட விடயங்களை ஒரு ஆசிரியர் வகை பிரித்து அறிய வேண்டுமெனின் அவ் ஆசிரியருக்கு விசேட தேவைகள் சார் கல்வி அறிவு இருப்பது மிகவும் அவசியமாகும்.
ஆசிரியர் மாணவன் கற்றலில் இடர்படுவதற்கான பிரதான காரணத்தை அறிந்த பின்பு அம் மாணவன் குறித்த பிரச்சினையினை மேறகொண்டு கற்றலில் ஈடுபடுவதற்கான ஆலோசனைகளை வழங்குவது அவசியமாகும். உதாரணமாக பகுதியளவில் காது கேளாமைக் குறைபாடுள்ள மாணவனுக்கு வகுப்பறையில் முன் வரிசையில் அல்லது ஆசிரியருக்கு அண்மையில் அமர்ந்திருக்க வேண்டும். என்பது போன்ற ஆலோசனைகளை ஆசிரியர் வழங்க வேண்டும்.
மேலும் கற்றலில் இடர்படுகின்றனர் என அடையாளம் காணப்பட்ட மாணவர்கள் ஏனைய மாணவர்களைப் போல் சிரமமின்றிக் கற்றல் நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு மாணவர்களுக்கு ஆசரியர் வகுப்பறையிலேயே சில வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டியது அவசியமாகும்.
உதாரணமாக பகுதியளவில் பார்வைக் குறைபாடுடைய பிள்ளைக்கு ஒரு ஆசிரியர் பின்வரும் வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.
முன்வரிசையில் அமரச் செய்தல்
போதிய வெளிச்சம் கிடைக்கக்கூடிய இடத்தில் அமரச் செய்தல்.
கரும்பலகையில் எழுத்துக்களை பெரிதாக எழுதுதல்
பார்வைக் குறைபாடுடைய மாணவர்களுக்கு தனியான தகவல் அட்டைகளை வழங்குதல்.
மேற்படி உதாரணத்தை எடுத்து நோக்குவோமாயின் விசேட தேவைகள் சார் கல்வி அறிவுள்ள ஆசிரியர் ஒருவருக்கே பார்வைக் குறைபாடுடைய மாணவர்களுக்கு ஆலோசனையை வழங்குவதுடன் வகுப்பறையில் அவ்வாறான மாணவர்களுக்கான வசதிகளையும் ஏறபடுத்திக்கொடுக்க முடியும்.
மேற்படி விடயங்களின் அடிப்படையில் இன்றைய வகுப்பறையிலுள்ள மாணவர்களுக்கு வெற்றிகரமான கற்பித்தலை மேற்கொள்ள அனைத்து ஆசிரியர்களும் விசேட தேவைகள் சார் கல்வி என்ற எண்ணக்கரு தொடர்பாக போதிய விளக்கம் பெற்றிருப்பது அவசியம் என்பது உறுதியாகின்றது.
By : Paluvoor Jeeva